வறண்ட பாலை நிலங்களில், காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை நீராக்கும் சில தொழில்நுட்பங்கள், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நுண்ணிய கம்பி வலையை, ஒரு சட்டத்தில் மாட்டி, காற்றில் வைத்து விடுவதும் அதில் ஒன்று.
காற்று அந்த வலையின் வழியே செல்லும் காற்றின் ஈரப்பதம், நெருக்கமான கம்பிகளில் சிறுகச் சிறுக சேர்ந்து, நீர் திவலைகளாக மாறும். நீர் திவலை பெரிதாகும்போது, புவியீர்ப்பு விசை கீழ் நோக்கி இழுக்க, திவலைகள் திரண்டு உருண்டு, கீழே உள்ள நீர்க்கலனில் சேகரிக்கப்படும்.
இந்த எளிய தொழில்நுட்பத்தில் ஒரு சிறு மாற்றத்தை செய்தால், இன்னும் சிறப்பாக நீரை சேகரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர், அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா தொழில்நுட்ப நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.
கலிபோர்னிய கடற்கரை பகுதியில், காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் செகோயா மரங்களைப் பார்த்து, இக்கண்டு பிடிப்பை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.
கம்பி வலையில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் கம்பிகளில், குறுக்காக செல்லும் கம்பி களை நீக்கி, நெடுக்காக இருக்கும் கம்பிகளை, மேலும் நெருக்கமாக வைத்த போது, நீர் வேகமாக கீழே ஓடி சேகரமானது.
இந்த புதிய முறை, 'யாழ்' எனப்படும் பண்டைய இசைக் கருவியைப் போல இருக்கிறது.
ஆய்வகத்தில், யாழ் கம்பி சட்டத்தை வைத்து சோதித்ததில், நீர் கூடுதலாக, விரைவாக காற்றிலிருந்து சேகரிக்க முடிந்த தாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் பாலை நிலப் பகுதிகளில், இந்த தொழில்நுட்பத்தை சோதிக்க இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment