Monday, April 23, 2018

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள்

உலக அளவில் நாம் நிலக்கடலை உற்பத்தியில் தனித்துவம் பெற்றிருந்தாலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தாவர எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எண்ணெய் வித்து பயிர்களில் சோயா மற்றும் கடுகுப்பயிருக்கு அடுத்த படியாக நிலக்கடலை நம் நாட்டில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடை சாகுபடியில், களை நிர்வாகத்தை முறையாக கடைபிடித்தால் அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம்.

இதுகுறித்து வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவிப் பேராசிரியர் ம.மதன்மோகன் கூறும் ஆலோசனைகள்: அதிகரித்து வரும் வேளாண்மை தொழிலாளர்கள் பற்றாக்குறையைக் சமாளிக்க வேளாண் உற்பத்தியில் ஒரு முக்கிய தொழில்நுட்பம் களைக்கொல்லியை பயன்படுத்துதல் ஆகும். களைகள் பயிரை போன்றே நிலத்தில் உள்ள சத்துக்களையும், நீரையும் மற்றும் சூரிய ஒளியையும் பயன்படுத்தி வளர்கிறது. இதனால் நாம் விதைத்த பயிருக்கும், களைகளுக்கும் நிலத்தில் உள்ள பயிர்சத்துகள், நீர் மற்றும் சூரியஒளியை பெறுவதில் போட்டி ஏற்பட்டு, மகசூல் குறைவதற்கு வாய்ப்பாகிறது.

பயிரைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை பரப்பி மகசூலையும் பாதிக்கின்ற செயலில் களைகளின் பங்கு அதிகம். எனவே சரியான தருணத்தில் களைகளை நீக்குவதால் பயிர்கள் வேகமாக வளர்ந்து நல்ல விளைச்சலுக்கு உதவும். நிலக்கடையில் விதை விதைத்த 45 நாள்களில் களைச் செடிகளை கட்டுப்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம். விதைப்பதற்கு முன்பாக கோடை உழவு செய்யலாம். பயிற்சூழற்சி செய்தல், வயல் வரப்புகளை சுத்தம் செய்து வைத்திருத்தல் களைச்செடிகளை அழித்தல் போன்றவற்றை விதைப்பதற்கு முன்பாக செய்வதன் மூலம் களைச் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்.

ரசாயனக் களைக்கொல்லிகளை விதை விதைத்த நிலத்தில் களைகள் முளைப்பதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ கட்டுப்படுத்தலாம். ராசயன களைக் கொல்லிகள் எந்த வகையை சார்ந்தது என்பதை நன்கு அறிந்து அவற்றைப் பயன்படுத்துவது நலம்.

ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் களைக்கொல்லியை 800 மி.லி. என்ற அளவில் விதைத்த மூன்று நாள்களுக்குள் 5- 6 சட்டி மணலுடன் கலந்து தூவலாம். அல்லது அகல வாய் தெளிப்புமுனை கொண்ட கைத்தெளிப்பானை பயன்படுத்தி புளுகுளோரலின் 800 மி.லி. அல்லது அளகுளோர் 800 மி.லி. அல்லது பெண்டிமெத்தலின் 1300 மி.லி. 200 மி.லி. நீரில் கலந்து மாலை வேளையில் மண் மீது தெளிக்க வேண்டும்.

அதாவது ஒரு ஏக்கருக்கு 20 டேங்க், ஒரு டேங்கிற்கு 40 மி.லி. களைக்கொல்லியை பயன்படுத்தலாம். (புளுகுளோரலின் அளகுளோர்) களைக்கொல்லியை தெளிக்கும் போதோ அல்லது தூவும்போதோ பின்னோக்கி நடந்து செல்ல வேண்டும். ரசாயனக் களைக்கொல்லியை பயன்படுத்தியவுடன் நிலத்துக்கு நீர்பாய்ச்சுவது அவசியம். முதல் களையை விதைத்த 30- 40 நாள்களில் களைகளை எடுத்தாலே நாம் திறம்பட கட்டுப்படுத்தலாம். இவ்வாறு களை மேலாண்மையை குறிப்பிட்ட நாள்களில் கையாண்டு அதிக மகசூல் பெறலாம்.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...