Monday, April 30, 2018

வியட்நாம்

வியட்நாம்:

வியட்நாம் அல்லது உத்தியோகபூர்வமாக வியட்நாம் சமவுடைமைக் குடியரசு என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். 2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 13ம் இடத்திலும், ஆசியாவில் 8வது இடத்திலும் உள்ளது. வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும். 1802ல் பேரரசர் ஜியா லோங்கினால் இப் பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதோடு பின்னர் 1945ல் ஹோ சி மின்னின் தலைமையில் வியட்நாம் சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டபோது இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. இந் நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது.

கி.பி. 938ல் பாதாங் நதிப் போரில் பெற்ற வெற்றியை அடுத்து சீனப் பேரரசிடமிருந்து வியட்நாம் சுதந்திரமடைந்தது. பல்வேறு வியட்நாமிய அரச வம்சங்களும் இங்கு தோன்றி நாட்டை வளப்படுத்தியதோடு வியட்நாம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தென்கிழக்காசியா நோக்கி விரிவடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனத் தீபகற்பத்தை பிரான்சியர் அடிமைப்படுத்தும்வரை இது தொடர்ந்தது. 1940களில் சப்பானிய ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வியட்நாமியர் முதலாவது இந்தோசீனப் போரை நடத்தினர். இதன்மூலம் 1954 பிரான்சியர் வெளியேறினர். அதன்பிறகு வியட்நாம் அரசியல் அடிப்படையில் வட, தென் வியட்நாம்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்தமையினால் வியட்நாம் போர் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான தென் வியட்நாமை எதிர்த்து வட வியட்நாமும் வியட்கொங் படைகளும் போர்புரிந்தன. 1975 இல் வட வியட்நாமின் வெற்றியை அடுத்து போர் நிறைவடைந்தது.

வியட்நாம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. எனினும் வியட்நாம் ஏழ்மை நாடாகவும் அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும் தொடர்ந்தது. 1986 இல், அரசாங்கம் தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டமையின் விளைவாக உலகப் பொருளாதாரத்துடன் வியட்நாம் ஒன்றிணையத் தொடங்கியது. 2000ம் ஆண்டளவில் பலநாடுகளுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி வீதம் மிக உயர்வாகக் காணப்பட்டதோடு, 2011 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிச் சுட்டெண்ணில் ஏனைய 11 பாரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் இடம்பெற்றது. இதன் சிறந்த பொருளியல் சீர்திருத்தங்கள் காரணமாக 2007 இல் உலக வணிக அமைப்பில் இணைந்து கொண்டது. எவ்வாறாயினும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுகாதாரச் சேவைகளில் சமத்துவமின்மை மற்றும் பாலியல் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்:

பழங்கற்காலத்திலிருந்தே வியட்நாம் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ளன. கி.மு. 500,000 வருடங்கள் பழமையான ஹோமோ எரெக்டசு மனித எச்சங்கள் வடக்கு வியட்நாமின் லாங் சான் மற்றும் ஙே ஆன் மாகாணங்களிலுள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்காசியப் பகுதியிலிருந்து பெறப்பட்ட மிகமுந்திய ஹோமோ சேப்பியன் எச்சங்கள் நடுப் பிளைத்தோசீன் காலத்தின் ஆரம்பப் பகுதிக்குரியனவாகும். இவற்றுள் தாங் ஓம் மற்றும் ஹாங் ஹும் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற பற்சிதைவு எச்சங்களும் உள்ளடங்கும். பின் பிளைத்தோசீன் கால ஹோமோ சேப்பியன் பல் எச்சங்கள் டொங் கான் பகுதியிலும்,முன் ஹோலோசீன் பகுதிக்குரிய பல் எச்சங்கள் மாய் தா தியூ, லாங் காஓ மற்றும் லாங் கௌம் ஆகிய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெண்கலக் காலம்:

கிமு 1000 ஆம் ஆண்டளவில், மா ஆறு, செவ்வாறு ஆகியவற்றின் படுக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட அரிசிப் பயிர்ச்செய்கையும் வெண்கல வார்ப்புத் தொழிலும் காரணமாக தொங் சோன் பண்பாடு வளர்ச்சி பெற்றது. இப்பண்பாட்டில் உருவாக்கப்பட்ட வெண்கல மேளங்கள் புகழ்பெற்றவை. இக்காலத்தில், முந்தைக்கால வியட்நாமிய அரசுகளான வான் லாங் மற்றும் ஔ லாக் என்பன தோற்றம் பெற்றன. கி.மு. முதலாயிரவாண்டில் இப்பண்பாட்டின் தாக்கம் தென்கிழக்காசியக் கடலோர அரசுகள் உட்பட்ட தென்கிழக்காசியாவெங்கும் பரவியது.

1946–54: முதல் இந்தோசீனப் போர்:

1945 செப்டம்பர் 2 ஆம் திகதி வியட்நாம் சுதந்திர நாடாக ஹோசிமின் தலைமையிலான புரட்சிகர அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் பிரெஞ்சு அரசு தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வியட்நாமை தங்கள் காலனியாதிக்கத்திற்குள் தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதற்கெதிராக வியட்நாம் மக்கள் கடுமையான நேரடிப் போரில் ஈடுபட்டனர். சுதந்திர பிரகடனத்திற்குப் பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகள் நீடித்த இப்போர் 1954 இல் வியட்நாம் மக்களின் விடுதலைப் படை வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்தது. 1954 மே மாதம் 5ம் நாள் பிரெஞ்சு படைத் தளபதியும் கூட்டாளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 10000 பிரெஞ்சுப் படையினர் சரணடைந்தனர்.1954 ஜூலை 21 ஜெனிவா ஒப்பந்தம் மூலம் வியட்நாம் சுதந்திரத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.ஆனாலும் பிரச்சினை தொடர்ந்தது. வியட்நாம் நாடு தற்காலிகமாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் பகுதியாகும் .

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...