என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மாற்றுக் குடியிருப்பை அந்த நிறுவனம் வழங்குவதுடன், வாரிசுகளுக்கு பல்வேறு சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது. இதுதொடர்பாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் திறன் மேம்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன்படி, தற்போது முதியோர் பராமரிப்பு மற்றும் அலுவலகப் பராமரிப்புக்கான சிறப்புப் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. நெய்வேலி வட்டம் 6-இல் உள்ள ஆனந்தம் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, என்எல்சி மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் என்.சங்கர் தொடக்கி வைத்தார். சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொதுமேலாளர் ஆர்.மோகன், பொது மேலாளர் சேகர், துணைப் பொது மேலாளர் கே.ரமேஷ் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மைய இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
முதியோரைப் பராமரித்தல் தொடர்பாக 3 மாதங்கள் நடைபெறும் பயிற்சியிலும், அலுவலகப் பராமரிப்பு தொடர்பாக 2 மாதங்கள் நடைபெறும் பயிற்சியிலும், மொத்தம் 60 பேர் இணைந்துள்ளனர். பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆனந்தம் இல்லத்தில் நடைபெறும். முதியோர் பராமரிப்புப் பயிற்சி பெறுபவர்களுக்கு என்எல்சி பொது மருத்துவமனையிலும், அலுவலகப் பராமரிப்புப் பயிற்சி பெறுபவர்களுக்கு என்எல்சி விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலகங்களிலும் செய்முறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு உதவித் தொகையாக தினமும் ரூ.100 வழங்கப்படும். இதற்காக என்எல்சி நிறுவனம் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு மையம் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கும். பயிற்சி வகுப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மைய இயக்குநர்கள் வி.அருள்செல்வம், ஆர்.மாலதி, ஒருங்கிணைப்பாளர் ஜே.கிருஷ்ணன் ஆகியோர் நடத்த உள்ளனர்.
No comments:
Post a Comment