Tuesday, June 26, 2018

தமிழ் மொழி || TAMIL LANGUAGE

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.



இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 ஆவது ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில்ஒன்றாகும்.

திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.

எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.


தமிழ் பிராமி எழுத்து, தென் இந்தியாவின் சாதவாகன பேரரசின் அரசர் 'வஷிஷ்ட்டி புத்திர சாதகர்ணி' -இன், இருமொழி நாணயத்தின் (160 AD) பின்புறத்தில் உள்ளது. முன் புறத்தில் அரசனின் முக உருவும், பிராகிருத மொழி பிராமி எழுத்திலும் உள்ளது.

வரலாறு:

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது.

தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும்.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன.

இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும்.

இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 400 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 600 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.

பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத் தக்க காப்பியம், கி. மு 200 முதல் கி.பி 200 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும், மொழியியலாளர்களும், தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
  • சங்க காலம் (கிமு 400 – கிபி 300)
  • சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
  • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
  • மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
  • தற்காலம் (கிபி 1800 - இன்று வரை)

பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன.

பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது.

இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது.

கி.பி.800-இற்கும் 1000-இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்:

தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். 

தமிழ் மொழிக் குடும்பம்:

  • தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ்- மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
  • தமிழ்-குடகு மொழிகள்: தமிழ்- குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்.
  • தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ்- கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
  • திராவிட மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.

ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர்.

மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.


தமிழ் என்னும் சொல்:

சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ்என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.

காமெல் சுவெலிபில் என்ற செக்குமொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார்.

மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழ் பேசப்படும் இடங்கள்:

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.

தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.

அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ்போன்ற நாடுகளில் குறிப்பிடத் தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.

தென்னாப்பிரிக்கா, கயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட், டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந்நாடுகளில் அவர்கள் தமிழ் மொழியைப் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.

ஆட்சி மொழி அங்கீகாரம்:

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின்எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.

இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது.

சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.


இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்:

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து  இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்-ஆல் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

எழுத்துமுறை:


தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. 

தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. 

ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். 

இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் ஈ. வெ. இராமசாமி நாயக்கரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. 

எனினும் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் -அது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

தமிழ் எழுத்துகள்:




கிரந்த எழுத்துகள்:

கிரந்த எழுத்துகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். 



இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.

தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 

இன்று, மணிப்பிரவாள எழுத்து நடைமறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துகள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

எண்கள்:

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. 



ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன. தமிழில் '0' என்று எண் வடிவம் இல்லை.

5 comments:

  1. I've never been familiar with the Tamil language or writing before. It looks very technical.

    ReplyDelete
    Replies

    1. We appreciate your comments,thank you for writing us.

      உங்கள் கருத்துகளை நாங்கள் பாராட்டுகிறோம், எங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

      Delete
  2. Wow! I like how ornate the writing is, all of the curves and swirls are very pretty.

    ReplyDelete
    Replies
    1. We appreciate your comments,thank you for writing us.

      உங்கள் கருத்துகளை நாங்கள் பாராட்டுகிறோம், எங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

      Delete
  3. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ ரனண

    ReplyDelete

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...