திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வை நடத்தக் கோரி, திருவண்ணாமலையில் இடைநிலை ஆசிரியர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கான கலந்தாய்வு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்தது.
கலந்தாய்வின் இறுதி நாளான வியாழக்கிழமை இடைநிலை ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டம் விட்டு வருவாய் மாவட்டம் மாறும் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ள 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் - ஆசிரியைகள் விண்ணப்பித்திருந்தனர்.
கலந்தாய்வு நிறுத்தம்: இந்த நிலையில், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்ட அரசுப் பள்ளிகளில் அதிகப்படியான காலிப் பணியிடங்கள் இருப்பதால், வியாழக்கிழமை நடைபெற இருந்த கலந்தாய்வை புதன்கிழமை இரவு தொடக்கக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது. இதனால், 8 மாவட்டங்களிலும் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.
கலந்தாய்வில் கலந்து கொள்ள வியாழக்கிழமை காலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த ஆசிரிய - ஆசிரியைகள் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்ட தகவலறிந்து அதிர்ச்சியடைந்தனர்
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் இயங்கும் தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
அப்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வை உடனே நடத்தக் கோரி முழக்கம் எழுப்பினர். பின்னர், தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமாரிடம் அளித்தனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment