ஒரு நல்ல இன்ஷூரன்ஸை எப்படித் தேர்வு செய்வது?
உங்களுடைய தேவையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். புதிதாக கார் வாங்கும்போது நிச்சயம் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்துவீர்கள்.
அதனால், காரை வாங்கும்போதே இரண்டு ஆண்டுகளுக்கு பம்பர் டு பம்பர் மற்றும் நோ-க்ளெய்ம் போனஸ் தரும் பாலிசியை வாங்குவது நல்லது.
6 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கினால் 5.55 லட்சம் IDV இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் கார் திருடுபோனாலோ அல்லது விபத்தில் பாதித்தாலோ, சரியான தொகை கிடைக்கும்.
சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் IDV குறைப்பது மூலம் பிரீமியத்தைக் குறைத்து தருவார்கள். அப்படி வாங்கவே கூடாது. க்ளெய்ம் எதுவுமே இல்லை என்றாலும், IDV குறைவாக இருந்தால், காரின் ரீசேல் வேல்யூ குறைந்துவிடும்.
"Return to invoice" எனும் இன்ஷூரன்ஸ் போடுவதன் மூலம், உங்கள் 6 லட்ச ரூபாய் கார் தொலைந்தாலோ, விபத்தில் சிக்கினாலோ 6 லட்சமும் கிடைக்கும். விலை உயர்ந்த கார் வாங்கும்போது இது போன்ற பாலிஸியை கூடவே வாங்க வேண்டும்.
எந்த நிறுவனத்தின் பாலிசியை வாங்குவது என்று குழப்பம் வரும்போது, க்ளெய்ம் கவரேஜை முதலில் பார்க்கவேண்டும்.
இன்ஷூரன்ஸ் பணம் தருவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார்கள்; உங்கள் பகுதியில் எத்தனை சர்வீஸ் சென்டர்கள்; அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் யார் கூட்டு வைத்துள்ளார்கள்.
அதில் எத்தனை கேஷ்லெஸ் சர்வீஸ் சென்டர்கள் இருக்கின்றன? என்பதெல்லாம் முக்கியம். கேஷ்லெஸ் சர்வீஸ் சென்டர்கள் இல்லையென்றால், பணம் கொடுத்து காரை சரிசெய்துவிட்டு, தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் நிலை வரும்.
எல்லாமே சாதகமாகப் பொருந்திவருகிறது. ஆனால், இரண்டு நிறுவனங்கள் வேறுவேறு விலையில் இன்ஷூரன்ஸ் தருகிறார்கள் என்றால், எந்த நிறுவனம் அதிக க்ளெய்ம் தந்துள்ளார்கள் என்பதைப் பார்த்து வாங்கவேண்டும். விலை எப்போதுமே கடைசியில் பார்க்க வேண்டிய விஷயம்.
இன்ஷூரன்ஸ் வாங்கும்போது ஆட்-ஆன்களை தேர்வு செய்வது அவசியமா?
ஆட்-ஆன்கள் நிறைய உள்ளன. அதில் 6 ஆட்-ஆன்கள் மிக முக்கியமானவை. எல்லோருக்குமே எல்லா ஆட்-ஆன்களும் தேவைப்படாது.
* Zero depreciation
* Personal accident cover
* Invoice Price Protection
* Consumables cover
* Engine Protection Cover
* NCB Protection
இணையத்தில் ஏன் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும்?
கார் வாங்குகிறோம் என்றால், இன்ஷூரன்ஸ் கூடவே தந்துவிடுவார்கள் என்பது மக்களிடையே உள்ள பொதுவான மனநிலை. இன்ஷூரன்ஸ் பற்றிய விவரம் கேட்பவர்கள்கூட பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ் கொடுத்தால் போதும்; எதையும் கவனிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.
- "Third party" மட்டுமா "Comprehensive" உள்ளதா?
- "IDV "எவ்வளவு?
- டிப்ரிஸியேஷன் வேல்யூ எவ்வளவு?
- ஆட்-ஆன் சேர்த்துள்ளார்களா?
- நோ க்ளெய்ம் போனஸ் தருவார்களா?
- ஏஜென்ட் கமிஷன் எவ்வளவு?
போன்ற கேள்விகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. இன்ஷூரன்ஸ் பாலிசிகளை இரண்டு நிமிடங்களில் ஆன்லைனில் வாங்க முடியும் என்றாலும் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் தலைமுறையான நாம்கூட இன்ஷூரன்ஸ் விஷயத்தில் பல சமயம் கோட்டை விட்டுவிடுகிறோம்.
புதிய கார் வாங்கும்போது முதல் 2 ஆண்டுகளுக்கு நிச்சயம் ஜீரோ டிப்ரிசியேஷன் தேவை. அதன் பிறகு உங்கள் கிளெய்மை பொருத்து நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
டாக்ஸி ஓட்டுவது, வாடகை விடுவது போன்றவற்றிற்கு கார் வாங்கும்போது பெர்சனல் ஆக்ஸிடன்ட் கவர் தேவை.
விபத்தின்போது டிரைவர் மற்றும் காரில் பயணிப்பவரின் மருத்துவ செலவுகளை இன்ஷூரன்ஸ் நிறுவனம் பார்த்துக் கொள்ளும்.
விலையுயர்ந்த கார்களுக்கு "Invoice Price Protection" தேவை. இன்ஜின் ப்ரொடெக்ஷன் கவர், அதிக மழை பெய்யும் இடங்களில் நிச்சயம் தேவை.
பம்பர் டூ பம்பர் இன்ஸூரன்ஸாக இருந்தாலும்கூட தண்ணீரால் இன்ஜின் சேதமானால், அதற்கு பணம் கிடைக்காது.
ஏன் இணையத்தில் வாங்க வேண்டும்?
உங்கள் காரின் பராமரிப்பு, நீங்கள் வசிக்கும் இடம், நீங்கள் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும் தேதி, காரின் வயது, எதிர்பார்க்கும் IDV, போன்ற பல விஷயங்களை வைத்து உங்களுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் முடிவு செய்யப்படும்.
ஒரு ஏஜென்டிடம் வாங்குகிறோம் என்றால், அவரிடம் இருக்கும் 4 பாலிசிகளில் ஒன்றைத்தான் தேர்வு செய்யவேண்டும்.
ஆனால், இணையத்தில் எல்லா நிறுவனங்களின் பாலிசிகளும் அதன் சாதகபாதகங்களும் காட்டப்படும் என்பதால், நமக்குத் தேவையான இன்ஸூரன்ஸை நாமே தேர்ந்தெடுக்கலாம்.
வெளியில் கிடைப்பதைவிட 50 சதவிகிதம்வரை விலை குறைவான பாலிசிகள்கூடக் கிடைக்கும்.
பெட்ரோல் பங்கில் கொடுப்பதுபோல புது இன்ஷூரன்ஸ் வாங்கும்போது 10 சதவிகித கமிஷன் தொகை கொடுக்கத் தேவையில்லை.
உங்களுக்குத் தேவையான பாலிஸியையும் ஆட்-ஆன்களையும் நீங்களே பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் வாங்கினால் தேவைகளுக்கு ஏற்ப இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?
உங்கள் தேவைக்கு ஏற்றதுபோல இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளிடம் வாங்கும்போதும்கூட கிடைக்கும்.
ஆனால், ஆன்லைனில் வாங்கும்போது சில இன்ஸூரன்ஸின் விலை உங்களுக்காக மாற்றியமைக்கப்படும்.
உதாரணத்துக்கு, தமிழகத்தில் ஹூண்டாய், ஹோண்டா, மஹிந்திரா போன்ற கார் வைத்திருப்பவர்கள் குறைவாக க்ளெய்ம் செய்கிறார்கள்.
டொயோட்டா கார் வைத்திருப்பவர்கள் அதிகமாக க்ளெய்ம் செய்கிறார்கள். உத்திரபிரதேசத்தில் இது தலைகீழாக உள்ளது.
அதனால், தமிழ்நாட்டில் ஹோண்டா கார்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம் விலை மற்ற மாநிலத்தைவிடக் குறைவாக இருக்கும்.
இதுபோல வசிக்கும் இடம்; என்ன கார் வைத்துள்ளோம்; நொ-க்ளெய்ம் போனஸ்; டீசலா, பெட்ரோலா, சிஎன்ஜியா; காரின் வயது; காரின் பாடி டைப்; இன்ஷூரன்ஸ் காலாவதியாவதற்கு எத்தனை நாள்களுக்கு முன்பு புதுப்பிக்கிறீர்கள் என்று ஏழு அளவீடுகள் உள்ளன.
இதை வைத்து இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறையும். ஆனால், நேரடியான இன்ஷூரன்ஸ் வாங்கினால், காரை மோசமாகப் பராமரிப்பவருக்கும் சரி காரை நன்றாகப் பராமரிப்பவருக்கும் சரி, ஒரே தொகைதான்.
நேரடியாக வாங்கும்போது IDV குறைவாக உள்ளது என்றால், ஏஜென்டுடன் பேரம் பேச வேண்டும். ஆன்லைனில் அதெல்லாம் தேவையில்லை. நீங்கள் கேட்கும் IDV-யில் எத்தனை நிறுவனங்கள் எவ்வளவு பிரீமியத்தில் தருகின்றன என்று பார்த்து நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment