Saturday, June 23, 2018

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் | Correction In Tamil Letters

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கட்டுரை கொஸ்தான்சோ ஜுசேப்பே பெஸ்கி (1680-1747) என்னும் இயற்பெயரும் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயரும் கொண்ட தமிழறிஞர் ஒருசில தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தி அமைத்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. 

வீரமாமுனிவர் தமிழகத்தில் 1710-இலிருந்து 1747 வரை மறைப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றினார். 

தலைசிறந்த தமிழறிஞரான அவர் இலக்கணம், இலக்கியம், அகராதி, சிறுகதை போன்ற பல துறைகளில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்தார். 

தமிழுக்கு அவர் ஆற்றிய ஒரு சீரிய பணி தமிழ் எழுத்துக்களில் அவர் கொணர்ந்த சீர்திருத்தம் ஆகும்.

உயிரெழுத்துச் சீர்திருத்தம்:


1) அகரத்தையும் ஆகாரத்தையும் வேறுபடுத்தல்:

வீரமாமுனிவர் காலத்தில் ஆகாரத்தை எழுதும் பொழுது அகரத்தின் மேல் புள்ளியிட்டு எழுதியதை விடுத்து அகரத்திற்கு சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார்.

                                                                அ் => ஆ 



2) எகரத்தையும் ஏகாரத்தையும் வேறுபடுத்தல்:

முனிவர் காலத்திற்கு முன்னால் "எ" என்னும் எழுத்து குறிலாகவும் நெடிலாகவும் ஒலிப்புப் பெற்றது. 

அவர் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காண்பிக்க எகரத்தில் வருகின்ற மேல் கோடு நீட்டிச் சுழித்தால் அதை நெடிலாக ஒலிக்கலாம் என்று சீர்திருத்தம் கொணர்ந்தார்.

ஆனால் அச்சீர்திருத்தம் தற்போது வழக்கத்தில் இல்லை. 

அவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதி (1744) முழுவதிலும் "ஏ" என்னும் எழுத்தை "எு" என்றே எழுதியுள்ளார். 

இப்போது ஏகாரத்தில் இடப்படுகின்ற கீழ் வளைகோட்டைக் கொண்டுவந்தது யார் என்று தெரியவில்லை.

எ் => எு 



3) ஒகரத்தையும் ஓகாராத்தையும் வேறுபடுத்தல்:


இங்கேயும் குறிலையும் நெடிலையும் வேறுபடுத்த வீரமாமுனிவர் ஒகரத்தின் கீழே சுழி சேர்த்து அதை நெடிலாக்கினார்.

                                                                 ஒ் => ஓ 



உயிர்மெய்யெழுத்துச் சீர்திருத்தம்:


1) எகர ஏகார உயிர்மெய் வேறுபடுத்தல்:

தேன் என்பதைத் தென் என்பதிலிருந்து வேறுபடுத்த எகர ஒலி ஏகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட வீரமாமுனிவர் எகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஏகார ஒலி பெறச் செய்தார்.

                                                           தெ்ன் => தேன். 


2) ஒகர ஓகார உயிர்மெய் வேறுபடுத்தல்:

கோல் என்னும் சொல்லைக் கொல் என்னும் சொல்லிலிருந்து வேறுபடுத்த ஒகர ஒலி ஓகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட முனிவர் ஒகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஓகார ஒலி பெறச் செய்தார்.

                                                          தெ்ால் => தோல் 


3) உயிர்மெய்யெழுத்தில் ஆகாரத்தையும் ஓகாரத்தையும் சுட்டும் காலை ரகரத்திலிருந்து வேறுபடுத்தல்:


மான் என்னும் சொல்லிலும் கோன் என்னும் சொல்லிலும் ஆகாரமும் ஓகாரமும் வருகின்றன. 

அவற்றைக் குறிக்க பயன்படும் கால் ரகரம் போல் இருந்தாலும் அது கீழே வளைவு பெறுவதில்லை. 

இவ்வாறு வளைவு கொடுத்து நெடிலைச் சுட்டும் காலை ரகரத்திலிருந்து வேறுபடுத்தும் முறை வீரமாமுனிவர் கொணர்ந்த சீர்திருத்தம் அல்ல. 

அவர் காலத்திலேயே சிலர் கிரந்த ரகரம் போன்ற இம்முறையைக் கையாண்டனர் என்றும், தாமும் அவ்வாறு எழுதியதாகவும் முனிவர் கூறுகிறார். 

அதையே அவரும் பயன்படுத்தி வழக்கத்தில் கொண்டுவந்தார்.

இந்த ரகரம் சீர்திருத்தம் மலையாளத்தில் உள்ள ரகரம் "ര" போல இருந்தது.


பயன்:

உயிரெழுத்திலும் உயிர்மெய்யெழுத்திலும் வீரமாமுனிவர் கொணர்ந்த எகர ஒகர சீர்திருத்தத்தை ஆட்சியாளரும், அச்சகத்தாரும், அச்சடித்தோரும் ஏற்று நடைமுறைக்குக் கொண்டு வந்ததால் அச்சீர்திருத்தம் இன்றும் நிலைபெற்று, அனைவரும் மேற்கொள்ளும் வழக்கமாக வந்துவிட்டது.

தாம் செய்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வீரமாமுனிவரே தமது தமிழ்-இலத்தீன் அகராதியின் (1744) முன்னுரையில் 15ஆம் பத்தியில் விளக்கியுள்ளார்.

வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் சிறப்பை 
ச. இராசமாணிக்கம் கீழ்வருமாறு விவரிக்கிறார்:


“ தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ் எழுத்துக்களை எவராலும் மாற்ற முடியவில்லை...வெளிநாட்டில் பிறந்து, ஏலாக்குறிச்சி என்ற சிற்றூரில் பாமர மக்களிடையே பணிபுரிந்த வீரமாமுனிவர், இத்தகைய சீர்திருத்தத்தைச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது, செயற்கரிய செயலாகும்...வேறொன்றும் செய்யாமல், இஃது ஒன்றை மட்டும் செய்திருந்தாலே, அவருக்குத் தமிழில் சிறந்த இடம் கிடைத்திருக்கும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...