குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!
1. கீரை வகைகள்:
வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது.
இதில் அதிகளவில் உள்ள அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும்.
2. காய்கறிகள்:
உங்கள் குழந்தைகளின் தட்டில் காய்கறிகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். முக்கியமாக, பீட்ரூட், கத்தரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், மஞ்சள் மற்றும் பச்சை குடமிளகாய், மஞ்சள்பூசணி போன்றவை. பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் காளான் மிக நல்லது.
மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சூப் ஆகச் செய்து காலையில் அல்லது மாலையில் அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்க, 'ரெசிஸ்டன்சி பவர்' அதிகரிக்கும். அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டன், எழும்பு சூப் நல்லது.
3. தயிர்:
தயிரில் உள்ள ஆன்டி பாக்டீரியாக்கள், கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை வரவிடாமல் தடுக்கும், இதனால் குடல் சுத்தமாகி வயிறு இன்ஃபெக்ஷன் ஆகாமல் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
தயிர் பிடிக்காத குழந்தைகளுக்கு ஒரு டம்ப்ளர் மோர் குடிக்கக் கொடுக்கலாம்.
4. பழ வகைகள்:
ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, மாதுளை என்றுதான் பொதுவாக பழங்கள் வாங்குகிறோம். அத்தோடு வைட்டமின் சி இருக்கும் பழங்களையும் அதிகளவில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
பப்பாளி மற்றும் நெல்லிக்காய், சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு என புளிப்புத்தன்மையுடைய பழவகைகளில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்,
பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கும்.
5. நட்ஸ்:
பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவர, நோய் எதிர்பு சக்தி சீராக வளரும். இவற்றில் அதிகளவில் புரோட்டீன்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடித்து, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.
6. மீன்:
குழந்தைகள் உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டியது, மீன். புரோட்டீன் அதிகம் உள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது.
இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க உதவுவதுடன், கண்பார்வை குறைபாட்டைத் தவிர்த்து மூளைவளர்ச்சிக்கு உதவும்.
அதனால், வாரத்தில் ஒரு முறையாவது குழந்தைகளுக்கு மீன் கொடுக்கவும்.
7. தானிய வகைகள்:
கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்வரகு போன்ற தானியவகைகளை எல்லாம் கலந்து பொடிசெய்து, கஞ்சியாகவோ, ரொட்டியாகவோ அல்லது தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
இவற்றில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலைத் தொற்றுகளில் இருந்து காக்கும்.
8. முட்டை:
வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கியிருப்பதால் உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் உதவும்.
எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி, வேகவைத்த முட்டையில் அதிகளவு உள்ளது.
9. பூண்டு:
உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிற்கும் திறன் கொண்டது பூண்டு.
இதில் உள்ள Allicin என்ற பொருள், இன்ஃபெக்ஷனால் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி, காய்ச்சல், சளி அண்டாமல் காக்கும்.
அதனால் தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவில் 2 அல்லது 4 பல் பூண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.
10. மஞ்சள்தூள்:
மஞ்சள்தூளில் ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் ஆன்டி வைரஸ் இருப்பதால் நோய் எதிர்பு சக்தி அதிரிக்க உதவும்.
காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல் போன்ற நோய்கள் அண்டாமல் தடுக்கும்.
மேலும், ரத்தம் சுத்தம்செய்ய உதவவல்லது மஞ்சள்தூள். குழந்தைகளுக்கு இரவு கொடுக்கும் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொடுக்க, நன்றாக உறங்குவார்கள்.
அந்தச் சுவை விரும்பாத குழந்தைகளுக்கு, மோரில் மஞ்சள்தூள் கலந்து கொடுக்கலாம்.
No comments:
Post a Comment