Thursday, June 14, 2018

கார் டெலிவரி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்

டெலிவரி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!



காரைப் பதிவு செய்வதற்கு முன்பு, உங்களுக்காக அலாட் செய்யப்பட்ட கார் எதுவென்று முன்கூட்டியே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ‘அடுத்த ஸ்லாட்டில் உங்கள் கார் வருகிறது’ என்று சொன்னால், தாராளமாகக் காத்திருக்கலாம். தப்பில்லை. ஏனென்றால், ஃப்ரெஷ் லோடு இறங்கும்போது, புது மாடல் கிடைக்க வாய்ப்புண்டு. 

அதேபோல், எப்போதுமே டெலிவரி எடுக்கும்போது, பகல் நேரத்தில் எடுப்பதுதான் பெஸ்ட். காரை நன்றாக நோட்டம் விட்டு, சிராய்ப்புகள் ஏதும் இருக்கின்றனவா, ஸ்டிக்கரிங் வேலைப்பாடுகள் சரியாக உள்ளதா, நீங்கள் கேட்ட ஆக்சஸரீஸ் அனைத்தும் சரியாகப் பொருத்தியுள்ளார்களா என்பதையெல்லாம் பகலிலே செக் செய்தால்தான் சரியாக இருக்கும். 

சாயங்காலம் முடிந்து இரவு நேரத்தில் கார் டெலிவரி எடுக்கும்போது, சில விஷயங்களைக் கவனிக்க முடியாது. டயர்கள், பானெட் ஹூட், கண்ணாடிகள், பாடி பேனல்கள் போன்றவற்றை இரவு நேரங்களில் பார்ப்பதில் பெரிய வித்தியாசம் இருக்காது. அதேபோல், பகல் நேரத்தில் ஹெட்லைட் சரியாக எரிகிறதா, வைப்பர் வேலை செய்கிறதா, பூட் லைட் எரிகிறதா, பிரேக் பிடித்தால் பிரேக் லைட் எரிகிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். ஏதாவது பாகங்கள் ரிப்பேர் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும். 

சில கார்களில் டேஷ்போர்டுக்கும் - உள்ளே பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபேப்ரிக்ஸுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். சரியாகப் பொருந்தாமலும் இருக்கலாம். அது தயாரிப்பாளரின் குறைபாடு. அதையும் விடாதீர்கள். 

டெலிவரி எடுக்கும்போது ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பித் தரச் சொல்லி சிலர் கேட்பார்கள். அது வேண்டாமே! ஹேட்ச்பேக் கார்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பியே தருவார்கள். 

கார் ஷோரூமை விட்டுப் போனதும், கடமையை முடித்துவிட்டு அக்கடாவென்று நிம்மதியாக இருப்பார்கள் சில சேல்ஸ்மேன்கள். அடுத்து நமக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் அவரது நடவடிக்கை இருக்கும். உங்களைப்போல் நூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை அவர்கள் சந்திக்க வேண்டும் என்பதால், அவர்களின் சூழலையும் நாம் குறை சொல்ல முடியாது. எனவே, ‘‘எப்போ வேணாலும் கார் சம்பந்தமான சந்தேகத்துக்கு உங்களுக்குத்தான் போன் பண்ணுவேன்’’ என்று சேல்ஸ்மேனிடம் உறுதி வாங்கிக்கொள்ளுங்கள்.


இந்த இரண்டும்தான் மிக முக்கியம்!

சில டீலர்களில் கார்/பைக்குகளை யார்டில் அல்லது ஃபேக்டரியில் இருந்து லோடு அடிக்கும்போது டேமேஜ் ஆக வாய்ப்புண்டு. அவற்றை சர்வீஸ் சென்டரில் ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று விட்டுவிடுவார்கள். 

இது தவிர, ரிஜிஸ்ட்ரேஷன் கொண்டு போகும்போதும் இம்மாதிரி விபத்துகள் நடக்க வாய்ப்புண்டு. அதற்காகத்தான் டெலிவரி எடுக்கும்போது, இந்த இரண்டு முக்கியமான விஷயங்களை மறக்காதீர்கள்.

ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷன் இன்ஸ்பெக் ஷன் :

இது காரை புக் செய்யும்போதே செய்ய வேண்டியது. ஒரு கார் உங்கள் பெயரில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு முன்பு, யார்டிலிருந்து கார் இறங்கும்போது கார்களுக்கு டேமேஜ் ஏற்பட வாய்ப்புண்டு.

ரிஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகும் டேமேஜ்கள் நடக்காது என்று சொல்ல முடியாது. ரிஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்கு சர்வீஸ் சென்டர்தான் பொறுப்பு. அதையெல்லாம் சர்வீஸ் மேலாளரிடம் தெளிவாகப் பேசி, கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். 

முடிந்தவரை ரிஜிஸ்ட்ரேஷன் நாளன்று உங்கள் பக்கமிருந்து யாராவது உடன் சென்றால் நல்லது. ‘ஆர்டிஓ ஆபீஸர் லீவு; நாளன்னைக்குத்தான் முடியும்’ என்று சிலர் தங்களது சொந்த வேலைகளுக்குக்கூட நம் புது காரைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம்.


ப்ரீ டெலிவரி இன்ஸ்பெக் ஷன்:

இது இரண்டாவது இன்ஸ்பெக் ஷன். இது காரை டெலிவரி எடுக்கும்போது செய்ய வேண்டியது. ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷன் இன்ஸ்பெக் ஷனின்போது நீங்கள் பார்த்த விஷயங்கள் எல்லாமே அந்த காரில் அப்படியே இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யும் சோதனை இது. 

ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷனின்போது, காரை நீங்கள் போட்டோ எடுத்துக்கூட இதை செக் செய்து கொள்ளலாம். நீங்கள் புக் செய்த ஆக்சஸரீஸ் அனைத்தும் ஃபிட் ஆகியிருக்கிறதா, காரில் உள்ள ஃப்யூச்சர்கள் அனைத்தும் சரியாக வேலை செய்கின்றனவா என்பதற்கான செக்லிஸ்ட்தான் ப்ரீ டெலிவரி இன்ஸ்பெக் ஷன். 

‘நீங்க கேட்ட மியூசிக் சிஸ்டம் இல்லை. இதுவும் நல்ல பிராண்டுதான்’ என்று சில டீலர்கள் சமாளிப்பார்கள். ‘அந்த லெதரைவிட இது ஜென்யூன் லெதர். நல்ல குஷனிங் கிடைக்கும்’ என்று சீட் லெதர் ஸ்டாக் இல்லை என்று கை விரித்துவிட்டு, வேறு லெதர் ஃபிக்ஸ் செய்திருப்பார்கள். 

இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஃப்ளோர் மேட்டில் இருந்து அலாய் வீல் வரை எல்லாமே நீங்கள் கேட்டதுதான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். இல்லையென்றால், தயக்கமின்றி டிஸ்கவுன்ட் கேட்கலாம். 

மேலும், அந்த காரில் ‘ப்ரீ டெலிவரி இன்ஸ்பெக் ஷன்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதா என்று செக் செய்துவிட்டு காரை ஷோரூமிலிருந்து வெளியே கிளப்புங்கள்.

செக்லிஸ்ட்:

டெலிவரி எடுக்கும்போது, எப்போதுமே தனியாகச் செல்வது வேண்டாம். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதுதான் நலம். அவர்களை வைத்து செக்லிஸ்ட்கூடப் போட்டுக் கொள்ளலாம். 

டிக்கியைத் திறப்பது எப்படி, கதவு ஒழுங்காக லாக் ஆகிறதா, மியூசிக் சிஸ்டம் ஒழுங்காக வேலை செய்கிறதா, டயர் பிரஷர் சரியாக இருக்கிறதா, ஏ.சி கூலிங், சிக்னல்கள், இன்ஷூரன்ஸ் பேப்பர்கள், இன்ஷூரன்ஸ் பேப்பரில் உங்கள் கார் மாடல்/இன்ஜின்/சேஸி எண், ஆர்.சி புத்தகம், சர்வீஸ் மேனுவல், முதலுதவி கிட், ஸ்டெஃப்னி வீல், பிரேக்-டவுன் வார்னிங் கிட், இரண்டு சாவிகள், பஞ்சர் ஜாக்கி என்று ஒவ்வொன்றுக்கும் வீட்டிலேயே செக்லிஸ்ட் போட்டு, ஷோரூமில் வைத்து செக்லிஸ்ட்டைச் சரி செய்து கொள்வது தான் சரியான டெலிவரி. 

‘‘பஞ்சர் ஜாக்கி கிட் எக்ஸ்ட்ராவில் தான் சார் வரும். உங்களுக்காகத் தான் இந்த ஆஃபர்’’ என்று சில டீலர்கள், நம்மை மகிழ்ச்சிக் கடலில் தள்ள முயற்சி செய்வார்கள். இவை எல்லாமே எக்ஸ்ட்ரா இல்லை; நம் உரிமை. இதைத் தயக்கமின்றிக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...