Tuesday, June 12, 2018

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் | ஸ்பீடோ மீட்டர் காட்டும் வேகம் உண்மையா ?

Instrument Cluster

ஸ்கேன் மானிட்டர் என்றுகூட காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
காரில் இருக்கும் கூலன்ட் அளவைச் சொல்லும் இன்ஜின் டெம்பரேச்சர், பேட்டரியின் டிரெயினிங் அளவு, கார் எவ்வளவு வேகத்தில் போகிறது; எரிபொருள் எவ்வளவு காலியாகிறது, இருக்கும் எரிபொருளில் எத்தனை கி.மீ பயணிக்கலாம்.

வெளியே உள்ள தட்பவெப்ப நிலை, கார் வாங்கிய நாளிலிருந்து எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் ஓடோ மீட்டர், வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் ட்ரிப் மீட்டர்.

சீட் பெல்ட் போடச் சொல்லி எச்சரிக்கும் வார்னிங் லைட் என காருக்குள் நடக்கும் அத்தனை மூவ்மென்ட்களையும் முந்திச் சொல்வது - இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான்.

முதலில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என்றாலே, ஸ்பீடோ மீட்டர்தான். 1910-க்குப் பிறகுதான் கார்களில் ஸ்பீடோ மீட்டரை ஸ்டாண்டர்டு ஆப்ஷன் ஆக்கினார்கள். கப்பலில் இருக்கும் திசைகாட்டி போல டிசைன் செய்யப்பட்ட இந்த மீட்டரில் குண்டு குண்டான நம்பர்கள் இருக்கும். பெரிய முள் ஒன்று, நம்பர்களில் துடித்தபடி இருக்கும். 

நாம் எத்தனை கி.மீ போகிறோம் என்பதை இதை வைத்துத் தெரிந்து கொள்வதற்காக இதை முதன்முதலில் கார் நிறுவனங்களுக்கு சப்ளை செய்தது ‘ஓட்டோ ஷுல்ஸ் ஆட்டோ மீட்டர்’ எனும் நிறுவனம். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு இந்த டிசைன் மாறவே இல்லை. இதற்குப் பெயர் அனலாக் மீட்டர்.

நாளடைவில் கடிகார டிசைனுக்குப் பதில் வெறும் நம்பர்கள் மட்டும் தெரியும்படியாக வைத்து டிசைன் செய்யப்பட்ட மீட்டர்கள் வந்தன. இது டிஜிட்டல் மீட்டர். 


அனலாக் மீட்டர் எப்படி வேலை செய்கிறது?

மெக்கானிக், எலெக்ட்ரானிக் என்று இரண்டு வகைகளில் கிளஸ்டர் உண்டு. 1993-ல்தான் முதன்முதலில் எலெக்ட்ரானிக் மீட்டர் வந்தது. இத்தனை விவரங்களைச் சொல்லும் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்குப் பின்னால் சென்ஸார்கள் இருந்தால்தான் வேலைக்கு ஆகும். அதேநேரம் மெக்கானிக்கலாகவும் நிறைய விஷயங்கள் நடக்கின்றன.

ஒரு காரின் வேகத்தைத் தெரிந்துகொள்ள, டயர்களின் அல்லது டிரான்ஸ்மிஷனின் ரொட்டேஷன் வேகத்தை அதாவது rpm-மை அளவெடுத்து அனுப்பும் ஒரு சென்ஸார் நிச்சயம் தேவை. பல கார்களில் டிரான்ஸ்மிஷனில் இருந்துதான் வேகம் எடுக்கப்படுகிறது. 

இதற்கு மிகவும் உதவி புரிவது ஒரு டிரைவ் கேபிள். பல லேயர்களைக் கொண்ட, காயில் ஸ்ப்ரிங்குகளால் டைட்டான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த டிரைவ் கேபிள், ‘மான்ட்ரல்’ எனும் சென்டர் கேபிளைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும். 

இது மிகவும் ஃப்ளெக்ஸிபிளாக, வளைந்து நெளிந்துகொள்ளும் தன்மை கொண்ட, அதிக வேகத்தில் இயங்கும்போதுகூட அறுந்துபோகாத முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும். 

டிரான்ஸ்மிஷனில் இருந்து இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு இணைக்கப்பட்டிருக்கும் இந்த டிரைவ் கேபிள்தான், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரின் மூளை! 

வாகனம் நகரும்போது, இந்த கேபிள் ரொட்டேஷன் ஆகி, ஸ்பீடோ மீட்டருக்குத் தகவலை அனுப்புகிறது. இதுதான் கிளஸ்டரில் நீங்கள் பார்க்கும் வேகத்தின் அளவு. அப்படியென்றால், அனலாக் மீட்டரில் துள்ளும் அந்த முள்?


ஸ்பீடோ மீட்டரில் இன்னும் சில முக்கியமான பாகங்கள் உள்ளன. முக்கியமாக, காந்தம். கப் போல இருக்கும் மெட்டல் பீஸுக்கு உள்ளே இருக்கும் இந்த காந்தம் அமர்ந்திருக்கும் இடம் ஸ்பீடு கப். இது ஸ்பீடோ மீட்டர் டிரைவ் கேபிளின் மறுமுனையில் இருக்கும். இந்த ஸ்பீடு கப் ஒரு முள்ளில் அட்டாச் செய்யப்பட்டு, காந்தம் மூலம் அசைந்தாடுவதுதான் காரின் வேகம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கார் நெடுஞ்சாலையில் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. டிரைவ் ஷாஃப்ட், வாகனம் போகும் வேகத்துக்கு ஏற்ப சுழல்கிறது. 

இதேநேரம், ஸ்பைரல் கியர் மூலம் டிரான்ஸ்மிஷனுக்கு கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் டிரைவ் கேபிளுக்கு உள்ளே உள்ள மான்ட்ரெல் ஷாஃப்ட்டும் இதே வேகத்தில் சுழல்கிறது. கேபிளின் அடுத்த முனையில் இருக்கும் காந்தமும் இந்த வேகத்துக்கு ஏற்ப சுழலும்போது, ஸ்பீடோ மீட்டரில் வேகம் தெரிகிறது.

காரின் வேகத்தைக் குறைக்கும்போது ஸ்பீடு கப் காந்தம் மெதுவாகச் சுழல்வதும், வேகத்தைக் கூட்டும்போது வேகமாகச் சுழல்வதும், கார் நிற்கும்போது முள் ‘0’-வில் இருப்பதும் நடப்பது இதனால்தான்.

டிஜிட்டல் மீட்டர்?

இதுவே, டிஜிட்டல் மீட்டரில் டிரைவ் கேபிளுக்குப் பதில் சென்ஸார். இதற்கு VSS என்று பெயர். Vehicle Speed Sensor. இந்த VSS டிரான்ஸ்மிஷன் அவுட்புட் அல்லது க்ராங்க் ஷாஃப்ட் உடன் மவுன்ட் செய்யப்பட்டிருக்கும். காந்த சக்தி கொண்ட காயில் மூலம் இது சில பல்ஸ்களை உருவாக்கி, கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. 

வேகத்துக்கான அளவு இந்த பல்ஸ்களின் அதிர்வு எண்களை வைத்துத்தான் கணக்கிடப்படும். இதுவே தூரத்தைக் கணக்கிடுவதற்கும் ஒரு பல்ஸ் எண்ணிக்கை உண்டு. அதாவது, ட்ரிப் மற்றும் ஓடோ மீட்டர். உதாரணத்துக்கு, 40,000 பல்ஸ்களை VSS சென்ஸார் செய்தால், வாகனத்தின் தூரம் 1 மைல் (1.6 கி.மீ) கூடியிருக்கிறது என்று அர்த்தம். 

ஸ்பீடோ மீட்டர் காட்டும் வேகம் உண்மையா?

டிரைவ் கேபிளில் கியர் ரேஷியோ, டிஃப்ரன்ஷியல் ரேஷியோ, டயர்களின் அளவு இவை எல்லாவற்றையும் வைத்துத்தான் ஒரு வாகனத்தின் வேகம் கணக்கிடப்படும். ஒரு டயரின் அளவே இவை எல்லாவற்றையும் மாற்றிவிடும் தன்மை கொண்டவை. 

உதாரணத்துக்கு, 18 இன்ச் டயர்களைவிட, 20 இன்ச் டயர்கள் ஒரு சுற்றில் அதிக தூரத்தை கவர் செய்துவிடும். 20 இன்ச் டயர்கள், ஒரு சுற்றில் 62.8 இன்ச் தூரத்தை கவர் செய்கிறது என்றால், 30 இன்ச் டயர்கள் 94.2 இன்ச் தூரத்தை கவர் செய்யும். இதனால் கியர் ரேஷியோ, டிஃப்ரன்ஷியல் எல்லாமே மாறும். இதை ‘காலிபரேஷன்’ என்கிறார்கள். 

இந்த ஸ்பீடோ மீட்டர் காலிபிரேஷனை, கார் நிறுவனங்களே ஸ்டாண்டர்டாகச் செய்துதான் அனுப்புகின்றன.

எந்த ஸ்பீடோ மீட்டரின் அளவுமே 100% உண்மையானதல்ல. சொல்லப்போனால், சில கார் உற்பத்தியாளர்களே சொந்தமாக ஸ்பீடோ மீட்டரைத் தயார் செய்கிறார்கள். என்றாலும் இந்த ‘காலிப்ரேஷன்’ துல்லியமாக இருக்காது என்பதுதான் உண்மை. 

குறைந்தபட்சம் 4% முதல் 8% வரையாவது இந்த வேகத்தில் வேறுபாடு இருக்கும். அதாவது, உங்கள் கார் 80 கி.மீ வேகத்தில் போகிறது என்றால், 75 கி.மீ ஆகத்தான் இருக்கும். அதிலும் மாடிஃபைடு செய்யப்பட்ட கார்களில் நிச்சயமாக இந்தத் துல்லியத்தன்மை அதிகளவில் வேறுபடும். 

காரணம், பாடி பேனலில் இருந்து டயர், எடை, கியர் ரேஷியோ வரை எல்லாமே மாறுவதுதான் இந்தக் காரணம்.

ஸ்பீடோ மீட்டர் மட்டுமல்ல; சீட் பெல்ட் வார்னிங், டெம்பரேச்சர் வார்னிங், பேட்டரி வார்னிங், சர்வீஸ் இண்டிகேட்டர், ஃப்யூல் மீட்டர், ஹேண்ட்பிரேக் வார்னிங் என இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இல்லாமல் ஒரு வாகனத்தை ஓட்டுவதைக் கற்பனையே செய்து பார்க்க முடியாது. 

வாகனத்தில் என்ன நடக்கிறது; இன்ஜின் கண்டிஷன் எப்படி இருக்கிறது என்பன போன்ற விஷயங்களை எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கிளஸ்டரில் எந்த வார்னிங் சிம்பலும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஆக்ஸிலரேட்டர் மிதியுங்கள். 


என்னதான் கார் ஓட்டும்போது சாலையில் கவனமாக இருந்தாலும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும் அவ்வப்போது செக் செய்ய வேண்டும். ஆனால், இதற்கு ஒரு விநாடியாவது சாலையிலிருந்து பார்வை விலகத்தான் செய்யும். இந்த ஒரு விநாடியில் 50 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு கார், 46 அடி நகர்ந்திருக்கும். விபத்துகளுக்கு ஒரு விநாடி என்பது மிகப் பெரிய டைமிங்.

இதற்காகவே ‘ஹெட்-அப் டிஸ்ப்ளே’ என்றொரு ஆப்ஷன் வந்திருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் விஷயங்களைத் தாண்டி பிளைண்ட் ஸ்பாட்கள், சாலைத் தடுப்புகள், குறுக்கீடுகள் என்று பல விஷயங்கள் உங்கள் விண்ட்ஷீல்டிலேயே தெரிவதுதான் ஹெட்-அப் டிஸ்ப்ளே. 

இந்த ஹெட்-அப் டிஸ்ப்ளே அம்சத்தை வால்வோ போன்ற கார்களில் கொடுத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...