நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நிலை, உயர் நிலை பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஸ்வாஹா அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நிலை, உயர் நிலை பள்ளிகளில் மொத்தம் 51,03,539 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த பணியிடங்களில், 9,00,316 காலியாக உள்ளன.
தொடக்க நிலை பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில், உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
அந்த மாநிலத்தில் 2,24,327 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கடுத்து பிகார் 2-ஆவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2,03,934 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிக்கிம், ஒடிஸா, கோவா ஆகிய மாநிலங்கள் அதற்கடுத்து உள்ளன.
உயர் நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 25,657 பணியிடங்களில், 21,221 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பட்டியலில் பிகார் 2ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 3ஆவது இடத்திலும் உள்ளன என்று குஸ்வாஹா குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு குஸ்வாஹா அளித்துள்ள பதிலில், 7 சதவீத பள்ளிகளில் முக்கிய பழுது பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment