Saturday, May 5, 2018

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

**********************************************************************



1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.


2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

  • அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
  • அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
  • உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
  • பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
  • பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

Friday, May 4, 2018

குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு இன்று கடைசி

குரூப் 2ஏ எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வெள்ளிக்கிழமையான  இன்று கடைசி நாளாகும். மாலை 5.30 மணி வரை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதன்முறையாக ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக மே 4 -ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முதல் சிங்கள அரசு


Arrival Of Vijaya

வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவின் இதிகாசங்களான “ராமாயணம்”, “மகாபாரதம்” போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்:

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

“வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்:

விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்
.
அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். “விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்” என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, “எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்” என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி:

விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் “பேரழகு படைத்தவள்” என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, “மகாவம்சம்”)

குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி:

விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். “ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்” என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி:

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, “நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு” என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு “லங்காபுரா” என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்:

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.”
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை:

1956-ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். 

எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்” என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...